செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் கேட்டு பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம்

Published On 2020-12-07 19:42 GMT   |   Update On 2020-12-07 19:42 GMT
பைசர், சீரம் நிறுவனங்களை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி விண்ணப்பித்துள்ளது.
புதுடெல்லி:

அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் இணைந்து கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயன் அளிப்பதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளன. பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு பிரிட்டன் மற்றும் பக்ரைன் நாடுகள் அனுமதி அளித்தது. 

இந்தியாவில் பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் இந்தியா நிறுவனம் நேற்று முன்தினம் விண்ணப்பித்தது.
 
இதேபோல், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஸ்வீடனின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமத்தை புனேவை தலைமையிடமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பெற்று, கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்துள்ளது. 

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கி வரும் சீரம் நிறுவனம், தங்கள் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் நேற்று விண்ணப்பித்துள்ளது. 

இந்நிலையில், உள்நாட்டு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனமும் தனது கோவேக்சின் தடுப்பூசியை இந்தியாவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி விண்ணப்பித்துள்ளது.

பைசர் மற்றும் சீரம் நிறுவனங்களை தொடர்ந்து பாரத் பயோடெக் தனது கொரோனா தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள 3-வது நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News