செய்திகள்
கொரோனா சோதனை

ஆர்.ஆர்.நகர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரிகள் உள்பட 84 பேருக்கு கொரோனா

Published On 2020-11-13 03:52 GMT   |   Update On 2020-11-13 03:52 GMT
ஆர்.ஆர்.நகர் தொகுதி தேர்தலில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூரு :

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் (ராஜராஜேசுவரிநகர்) சட்டசபை தொகுதிக்கு கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது. அதன்படி, 2,310 அதிகாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 6 தேர்தல் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதற்கட்டமாக 287 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த போலீசார் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர். இதுபோல, ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வசிக்கும் 12 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்திருப்பதால், இன்னும் ஓரிரு நாட்களில் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் 2-வது கட்ட கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News