செய்திகள்
மாயாவதி

பகுஜன் சமாஜ் - பா.ஜ.க. கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை : மாயாவதி திட்டவட்டம்

Published On 2020-11-03 01:30 GMT   |   Update On 2020-11-03 01:30 GMT
கொள்கை முரண்பாடுகள் காரணமாக, தனது கட்சி எக்காலத்திலும் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்காது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.
லக்னோ:

கொள்கை முரண்பாடுகள் காரணமாக, தனது கட்சி எக்காலத்திலும் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்காது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.

இதுதொடர்பாக லக்னோவில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“உத்தரபிரதேச சட்டப்பேரவை, மாநிலங்களவை உள்பட எதிர்காலத்தில் எந்தத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைக்காது.

எதிர்காலத் தேர்தல்களில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்கும்வகையில் பா.ஜ.க. உள்பட எந்த கட்சிக்கும் எனது கட்சியினர் வாக்களிப்பார்கள் என்று நான் கூறியதை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சியினர் திரித்து கூறிவிட்டனர். ஆனால் மதவாத கட்சியான பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை.

‘அனைவருக்கும், அனைத்து மதத்தினருக்கும் நன்மை’ என்பதே எங்கள் கொள்கை. பா.ஜ.க.வின் கொள்கை அதற்கு எதிரானது. அப்படி மதவாத, சாதிய, முதலாளித்துவ கொள்கை உள்ளவர்களுடன் எங்களால் கூட்டணி அமைக்க முடியாது. அப்படி கூட்டணி வைப்பதைவிட, அரசியல் சன்னியாசத்துக்கும் நான் தயார்.

மதவாத, சாதிய, முதலாளித்துவ சக்திகளை எதிர்த்து நான் அனைத்து நிலைகளிலும் போராடுவேன், யாருக்கும் அடிபணிய மாட்டேன்.

சட்ட மேலவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்கும் அளவு வலுவாக உள்ள பா.ஜ.க. உள்பட எந்த கட்சி வேட்பாளரையும் எங்கள் கட்சி ஆதரிக்கும் என்று நான் முன்பு கூறியதில் உறுதியாக உள்ளேன். உத்தரபிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சியினர் எனது கருத்தை திரித்து கூறிவிட்டனர். ஆனால் அந்த முயற்சியில் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.

தமக்கென ஒரு கொள்கை, செயல்பாடு கொண்ட கட்சி பகுஜன் சமாஜ் என்று எல்லோரும் அறிவார்கள். நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்த காலத்திலும் அதில் சமரசம் செய்து கொண்டதில்லை. முஸ்லிம் சமுதாயத்துக்காக நாங்கள் எங்கள் ஆட்சியை தியாகம் செய்யவும் தயங்கவில்லை.

எனது ஆட்சிக் காலத்தில் இந்து- முஸ்லிம் கலவரம் ஏற்பட்டதில்லை. வரலாறு அதற்கு சான்றாக உள்ளது. மாறாக சமாஜ்வாடி, காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் இரு சமுதாய மோதல்கள் ஏராளமாக நடைபெற்றன.

நான் அதிகாரத்தில் இருந்தபோது முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளித்தேன். அந்த சமுதாயத்தின் 2 வேட்பாளர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட எனது கட்சியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.”

இவ்வாறு மாயாவதி கூறினார்.
Tags:    

Similar News