செய்திகள்
கேரள சுகாதாரத்துறை மந்திரி கேகே ஷைலஜா

கேரளாவில் கொரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதே பிரதானமான நோக்கம் - சுகாதாரத்துறை மந்திரி கேகே ஷைலஜா

Published On 2020-10-11 16:42 GMT   |   Update On 2020-10-11 16:42 GMT
கேரளாவில் கொரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதே பிரதானமான நோக்கம் என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி கேகே ஷைலஜா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் உச்சபட்சமாக 11 ஆயிரத்து 755 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 23 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், அம்மாநிலத்தில் இன்றும் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கேரளாவில் இன்று 9 ஆயிரத்து 347 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 96 ஆயிரத்து 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 33.31 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 91 ஆயிரத்து 798 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 66.32% என்ற அளவில் உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 1,003 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.35% என்ற அளவில் உள்ளது.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மந்திரி கேகே ஷைலஜா கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது என்பது தவறு. வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது தான். ஆனால், கொரோனா இறப்பு விகிதம் ஒப்பிடும்போது மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளாவில் குறைவான இறப்பு விகிதமே உள்ளது. 

கொரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதே எங்கள் பிரதான நோக்கம். ஊரடங்கு அமலில் இருக்கும் போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். 

ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்தியதற்கு அரசாங்கத்தை குற்றம்சுமத்த முடியாது. எனென்றால் மக்கள் தங்கள் வேலை, தொழில்களுக்கு திரும்பி பணம் சம்பாதிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் மக்கள் பட்டினியால் இறக்க நேரிடும்.

கேரளாவில் அரசு அமல்படுத்தியுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். 

என தெரிவித்தார்.
Tags:    

Similar News