செய்திகள்
தேர்தல் கமிஷன்

முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு வசதியை பயன்படுத்துவது எப்படி? - தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு

Published On 2020-10-04 23:13 GMT   |   Update On 2020-10-04 23:13 GMT
தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தபால் ஓட்டு வசதியை எப்படி பயன்படுத்தலாம் என்று தேர்தல் கமிஷன் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள், 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், தபால் ஓட்டு வசதியை பயன்படுத்தலாம் என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவே கூறியுள்ளது. இந்த நிலையில், இதற்கான புதிய உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள், 80 வயதை கடந்தவர்கள் ஆகியோரது வீடுகளில், தபால் ஓட்டுக்கு விருப்பம் தெரிவிக்கும் 12டி படிவத்தை வாக்குச்சாவடி மட்ட அதிகாரி நேரில் அளிக்க வேண்டும். அவர்கள் பூர்த்தி செய்த அந்த படிவங்களை வேட்புமனு தாக்கல் தொடங்கிய 5 நாட்களுக்குள் பெற்றுக்கொண்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், அந்த வாக்காளர்கள் வீட்டுக்கு அதிகாரிகள் ஓட்டுப்பெட்டியை எடுத்துச் செல்ல வேண்டும். ஓட்டு போடுவதை வீடியோ எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது, ராணுவத்தினர் பயன்படுத்தும் தபால் ஓட்டு முறையில் இருந்து மாறுபட்டது. இந்த நடைமுறை, பொதுத்தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், சமீபத்தில் 56 சட்டசபை தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும்.
Tags:    

Similar News