செய்திகள்
மம்தா பானர்ஜி

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக செப்டம்பர் 12ல் ஊரடங்கு நீக்கம் - மம்தா பானர்ஜி

Published On 2020-09-10 10:05 GMT   |   Update On 2020-09-10 10:05 GMT
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக செப்டம்பர் 12-ம் தேதி அன்று மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு நீக்கப்படுகிறது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

கொரோனோ நோய்த்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.

கொரோனா பரவலுக்கு இடையே நீட் தேர்வை நடத்த எதிர்ப்பு எழுந்தது. கடினமான சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வெழுத முடியாது. இதனால் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இதற்காக சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்தன.

நீட் தேர்வை ரத்துசெய்ய உத்தரவிட முடியாது என்ற சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்தலாம் என அனுமதி அளித்தது.

இந்த தீர்ப்பிற்கு எதிராக ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட், நீட் தேர்வுக்கு தடையில்லை என திட்டவட்டமாக அறிவித்தது.

இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக செப்டம்பர் 12-ம் தேதி அன்று மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு நீக்கப்படுகிறது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கு வங்காள அரசு ஆரம்பத்தில் செப்டம்பர் 11, 12-ம் தேதிகளில் மாநிலம் தழுவிய ஊரடங்கை அறிவித்தது. 13-ம் தேதி திட்டமிடப்பட்ட நீட் 2020 தேர்வைக் கருத்தில் கொண்டு, 12-ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை நீக்குவது குறித்து மாணவர் சமூகத்திடமிருந்து ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம், 

மாணவர்களின் ஆர்வத்தை மனதில் வைத்து, செப்டம்பர் 12-ம் தேதி ஊரடங்கை ரத்துசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் 13-ம் தேதி தேர்வில் எந்தவித அச்சமும், கவலையும் இல்லாமல் கலந்து கொள்ளலாம். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்..
Tags:    

Similar News