செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் அதிகாரிகள் மீது மோதிய வாகனத்தில் இருந்து 4.3 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2020-09-06 17:36 GMT   |   Update On 2020-09-06 17:36 GMT
கேரளாவில் கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது மோதிய வாகனத்தில் இருந்து 4.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு:

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த பெட்டியில் இருந்து பல கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.  இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி அமலாக்க துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த தங்க கடத்தல் வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.  இந்நிலையில், கேரளாவில் மற்றொரு தங்க கடத்தல் சம்பவம் நடந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் வாகனத்தில் தங்கம் கடத்தி செல்லப்படுகிறது என கிடைத்த தகவலை தொடர்ந்து சந்தேக அடிப்படையில், கொச்சி மற்றும் கோழிக்கோடு மண்டல பிரிவு வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் கரிப்பூர் விமான நிலையம் அருகே வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு வாகனம் அதிகாரிகள் இருவர் மீது மோதி விட்டு சென்றது.  அதனை துரத்தி பிடித்து சோதனை நடத்தினர்.  இந்த மோதல் சம்பவத்தில் வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரி ஒருவர், புலனாய்வு அதிகாரி மற்றும் ஓட்டுனர் ஒருவர் என 3 பேர் காயமடைந்தனர்.

அந்த வாகனத்தில் 4.3 கிலோ எடை கொண்ட தங்கம் இருந்தது தெரிய வந்தது.  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  வாகன ஓட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனை மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்க இலாகா தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News