செய்திகள்
ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

Published On 2020-08-31 13:28 GMT   |   Update On 2020-08-31 13:28 GMT
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி: 

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது.
 
இதற்கிடையே, டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப்பின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவரது மறைவு என்பது ஒரு சகாப்தத்தின் நிறைவு. இந்தியாவுக்கு மகத்தான சேவை செய்தார். தேசம் தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குடிமக்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜியின் மறைவு நாட்டிற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் அழியாத தடத்தை பதித்துள்ளார். அனுபவத்தில் அறிஞரான அவர், உயர்ந்த அரசியல்வாதி. அரசியல் எல்லையை தாண்டி சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் போற்றப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News