செய்திகள்
பாஜக

மணிப்பூரில் பாஜக அரசு தப்பியது - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

Published On 2020-08-10 17:49 GMT   |   Update On 2020-08-10 17:49 GMT
மணிப்பூரில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.
இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடந்த  சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 21 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஆதரவோடு பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக பிரேன் சிங் உள்ளார்.

இந்நிலையில், ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த  3  எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர்ந்தனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

ஆனால் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். அதன்பின், தங்கள் முடிவை திரும்பப் பெறுவதாகவும் அரசுக்கு மறுபடியும் ஆதரவு அளிப்பதாகவும் கூறினர்.

எனினும், பா.ஜ.க. அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை  எனக்கூறி வந்த காங்கிரஸ், பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.  

இதன்படி, இன்று அம்மாநில சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரென் சிங் பெரும்பான்மையை நிரூபித்தார். இதன்மூலம், மணிப்பூரில் நிலவி வந்த அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

முன்னதாக, இன்று சட்டசபை கூடியதும் சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வராததால், எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. சட்டசபையில் இருந்த இருக்கைகள் தூக்கி வீசப்பட்டதால், அவை பெரும் களேபரமாக காட்சி அளித்தது.
Tags:    

Similar News