செய்திகள்
டிகே சிவக்குமார்

சி.பி.ஐ.யில் பதிவாகி உள்ள டி.கே.சிவக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

Published On 2020-07-23 03:05 GMT   |   Update On 2020-07-23 03:05 GMT
டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கு மற்றும் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவருக்கு சொந்தமான பெங்களூரு, டெல்லியில் உள்ள வீடுகளில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் சிக்கி இருந்தது. இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக பணம் சேர்த்தது குறித்து சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்திருந்தது. அதே நேரத்தில் கர்நாடக அரசும் கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 25-ந் தேதி டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கு மற்றும் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி, அவரது ஆதரவாளர் சசிகுமார் சிவண்ணா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் பதிவான வழக்கு, கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி சசிகுமார் சிவண்ணா தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் டி.கே.சிவக்குமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News