செய்திகள்
குமாரசாமி

வெளிமாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்கு வரும் வாகனங்களை தடை செய்ய வேண்டும்: குமாரசாமி

Published On 2020-07-10 03:35 GMT   |   Update On 2020-07-10 03:35 GMT
வெறும் ஆலோசனை கூட்டங்களால் எந்த பயனும் இல்லை. வெளிமாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்கு வரும் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் கூறியதை நினைவுபடுத்துகிறோம். அதை இப்போது நினைக்கும்போது, அது பொய்யாகிவிட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு தனது தவறுகளை சரிசெய்துகொள்ள வேண்டும். முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனா கைமீறி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். எங்கு தவறு செய்தோம் என்பதை இப்போதாவது ஆலோசித்து சரிசெய்யுங்கள். மக்களை காக்கும் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

கொரோனாவை தடுக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அரசை குறை சொல்வது சரியாக இருக்காது. அரசின் செயல்படைகளில் எதிர்க்கட்சி தலைவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். எல்லா விஷயங்களிலும் எதிர்க்கட்சி தலைவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

பெங்களூருவில் 8 மந்திரிகளை நியமிப்பதாக அரசு சொல்கிறது. இது பெயரளவுக்கு இருக்கக்கூடாது. தனியார் டாக்டர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் சேவையை பெற வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு குடிநீர் வினியோகத்தை நிறுத்துவதாக கூறுவதால் எந்த பயனும் இல்லை.

தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சில பயன்களை அரசு வழங்க வேண்டும். இதன் மூலம் கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் 10 ஆயிரம் படுக்கைகளை அமைத்துள்ளதாக அரசு சொல்கிறது. அதற்கு தினமும் வாடகையாக ரூ.80 லட்சம் அரசு நிர்ணயம் செய்துள்ளது.

அதற்கு தேவையான டாக்டர்கள் மற்றும் நர்சுகளை அரசு எங்கிருந்து அழைத்து வருகிறது?. டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் சேவையை அரசு பெற முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கும் பயம் இருக்கிறது. அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மாநில அரசின் தோல்விகளை பற்றி நான் இப்போது எதையும் கூற மாட்டேன். தற்போது மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். பெங்களுருவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை தடை செய்ய வேண்டும். வெறும் ஆலோசனை கூட்டங்களால் எந்த பயனும் இல்லை. இதுகுறித்து முதல்-மந்திரி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மந்திரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இதனால் மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை முதல்-மந்திரி சரிசெய்துகொள்ள வேண்டும்.

கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக வழங்குவது இல்லை என்று புகார் எழுந்துள்ளது. பரிசோதனை முடிவுகளை விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே நாளில் பரிசோதனை முடிவை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனா பரிசோதனை முழுவதையும் அரசு சொந்த செலவில் செய்ய வேண்டும். பொதுமக்களிடம் பணம் வசூலிக்கக்கூடாது. கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.
Tags:    

Similar News