செய்திகள்
சந்திரகாந்த் பாட்டீல், பங்கஜா முண்டே

பங்கஜா முண்டேவுக்கு தேசிய அளவில் கட்சி பதவி: சந்திரகாந்த் பாட்டீல் தகவல்

Published On 2020-07-04 03:54 GMT   |   Update On 2020-07-04 03:54 GMT
முன்னாள் மந்திரி பங்கஜா முண்டேவுக்கு பாரதீய ஜனதாவில் தேசிய அளவில் கட்சி பதவி வழங்கப்படும் என்று கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.
மும்பை :

மறைந்த பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கோபிநாத் முண்டேயின் மூத்த மகள் பங்கஜா முண்டே. முந்தைய பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் மந்திரி பதவி வகித்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த தேர்தலில் தனது உறவினரான தேசியவாத காங்கிரசை சேர்ந்த தனஞ்சய் முண்டேயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அதன்பின்னர் பங்கஜா முண்டே கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

மேலும் அண்மையில் நடந்த எம்.எல்.சி. தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதற்கிடையே பங்கஜா முண்டே பாரதீய ஜனதாவில் இருந்து விலக போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் தான் பாரதீய ஜனதாவில் இருந்து விலக மாட்டேன் என்று தெரிவித்தார். கடந்த மாதம் தனது தந்தை கோபிநாத் முண்டேயின் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது, அமித்ஷா என் தலைவர், அவரை விரைவில் சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், பாரதீய ஜனதாவில் பங்கஜா முண்டேவுக்கு தேசிய அளவில் கட்சி பதவி வழங்கப்பட உள்ளதாக கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று தெரிவித்தார். மராட்டிய அளவில் கட்சியின் உயர் மட்ட குழுவிலும் அவர் இடம் பெறுவார் என்றும் கூறினார்.

அப்போது மாநில பாரதீய ஜனதாவின் புதிய செயற்குழுவையும் சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்தார். புதிய செயற்குழுவில் முன்னாள் மந்திரி ராம் ஷிண்டே, எம்.எல்.ஏ. ஜெய்குமார் ராவல் உள்பட கட்சியின் 12 துணைத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
Tags:    

Similar News