செய்திகள்
ப சிதம்பரம்

‘சீனா’ என்று கூறுவதில் ஏன் தயக்கம்?: பிரதமர் மோடிக்கு ப. சிதம்பரம் மீண்டும் கேள்வி

Published On 2020-07-03 15:37 GMT   |   Update On 2020-07-03 15:37 GMT
பிரதமர் மோடி ஏன் சீனா என்று குறிப்பிடுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி இன்று திடீரென லடாக் சென்றார். லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். அதன்பின் உரையாற்றிய பிரதமர் மோடி சீனா என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை.

சீனா பெயரை பிரதமர் மோடி உச்சரிக்காதது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?

இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? 

பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?’’ என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,  மோதல் நடந்த பகுதியில் இந்திய பிரதமர் மோடி இன்று திடீரென ஆய்வு செய்தார். லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள  நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத்தும் சென்றிருந்தார். 

பின்னர் நிம்முவில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமாக இருக்கிறது. நீங்கள் நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி உள்ளீர்கள். உங்கள் கோபத்தை எதிரிகள் பார்த்திருக்கிறார்கள். இந்திய வீரர்களின் தைரியத்தைக் கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டி உள்ளது. எதையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

வீரர்களின் வலிமை இமயத்தை விட உயர்ந்தது. நமது வீரர்களின் செயலுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் வலிமை மீது இந்த நாடே நம்பிக்கை கொண்டுள்ளது. 

நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது.  நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்திய நாட்டைக் காக்க உயிரிழந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News