செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: ஒரே நாளில் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-02 05:01 GMT   |   Update On 2020-07-02 05:01 GMT
இதுவரை இல்லாத புதிய உச்சமாக கர்நாடகத்தில் ஒரே நாளில் 1,272 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் வைரஸ் தொற்றுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி அதிகபட்சமாக 1,267 பேரும், மறுநாள் 29-ந் தேதி 1,105 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் சற்று குறைந்து, பாதிப்பு எண்ணிக்கை 947 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 1,272 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 14 ஆயிரத்து 985 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், மாநிலத்தில் நேற்று புதிதாக 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், 16 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 8,063 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 145 பேர் அடங்குவர்.

புதிதாக கொரோனா பாதித்தோரில், பெங்களூரு நகரில் 735 பேர், பல்லாரியில் 85 பேர், தட்சிண கன்னடாவில் 84 பேர், தார்வாரில் 35 பேர், பெங்களூரு புறநகரில் 29 பேர், விஜயாப்புராவில் 28 பேர், ஹாசனில் 28 பேர், உத்தர கன்னடாவில் 23 பேர், உடுப்பியில் 22 பேர், சாம்ராஜ்நகரில் 21 பேர், பாகல்கோட்டையில் 20 பேர், துமகூருவில் 19 பேர், தாவணகெரேயில் 16 பேர், சிக்பள்ளாப்பூரில் 15 பேர், கலபுரகியில் 14 பேர், ராமநகரில் 14 பேர், கொப்பலில் 13 பேர், ராய்ச்சூரில் 12 பேர், சித்ரதுர்காவில் 12 பேர், யாதகிரி, பீதர், பெலகாவியில் தலா 8 பேர், குடகில் 7 பேர், மண்டிய, கோலாரில் தலா 5 பேர், சிவமொக்காவில் 3 பேர், கதக்கில் 2 பேர், சிக்கமகளூருவில் ஒருவர் உள்ளனர்.

கொரோனா வைரசுக்கு நேற்று 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதில் பெங்களூரு நகரை சேர்ந்த 50 வயது பெண், 50 வயது நபர், தட்சிண கன்னடாவை சேர்ந்த 72 வயது முதியவர், பெலகாவியை சேர்ந்த 72 வயது முதியவர், பீதரை சேர்ந்த 80 வயது முதியவர், 63 வயது முதியவர், ஹாசனை சேர்ந்த 30 வயது இளைஞர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 417 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதில் நேற்று மட்டும் 16 ஆயிரத்து 670 மாதிரிகள் அடங்கும். 45 ஆயிரத்து 258 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News