செய்திகள்
முதல்வர் கெஜ்ரிவால்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி - கெஜ்ரிவால்

Published On 2020-06-29 07:18 GMT   |   Update On 2020-06-29 07:18 GMT
கொரோனாவால் உயிரிழந்த டெல்லி அரசு மருத்துவமனை மூத்த மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், சோதனை மற்றும் தனிமைப்படுத்தல், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், பிளாஸ்மா சிகிச்சை, கணக்கெடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் ஆகிய 5 ஆயுதங்கள் உதவுவதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 2,889 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83,077 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,623 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் பணியாற்றிய மயக்க மருந்து நிபுணர்,  மூத்த மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.  உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதல்வர் கெஜ்ரிவால் ,   கொரோனாவால் உயிரிழந்த டெல்லி அரசு மருத்துவமனை மூத்த மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் தலைநகர் டெல்லியில் விரைவில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும் எனவும், கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தோர் தாமாக முன் வந்து பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும்  முதலமைச்சர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News