செய்திகள்
லடாக் பகுதி இந்திய, சீன வீரர்கள் - கோப்புப்படம்

லடாக்கில் செய்த தவறுக்காக சீனா மிகப்பெரிய விலை கொடுக்கும் - ராணுவ நிபுணர்கள் கருத்து

Published On 2020-06-28 14:26 GMT   |   Update On 2020-06-28 14:26 GMT
லடாக்கில் செய்த தவறுக்காக சீனா மிகப்பெரிய விலை கொடுக்கும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
புதுடெல்லி:

லடாக்கின் கிழக்கில் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவிய சீன ராணுவம் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதில் கடந்த 15-ந்தேதி நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் கொல்லப்பட்டனர். இதனால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழ்ந்த இந்த மோதல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், சீனாவோ அண்டை நாடுகளின் பிராந்தியங்களை ஆக்கிரமித்து வருவது சர்வதேச அளவில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் லடாக்கில் சீனா மேற்கொண்டுள்ள இந்த தவறுக்காக அந்த நாடு மிகப்பெரிய விலை கொடுக்கும் என இந்திய ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக ராணுவத்தின் முன்னாள் துணைத்தளபதி குர்மித் சிங் கூறுகையில், ‘கிழக்கு லடாக்கில் ராணுவ ரீதியாக மோதலில் ஈடுபட்டதன் மூலம் சீனா மிகப்பெரிய தவறை செய்துள்ளது. ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், சீனா நடத்தியிருக்கும் இந்த மோதலால் சர்வதேச அளவில் அது அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த தவறுக்காக சீனா கொடுக்கும் விலை மிகப்பெரியதாக இருக்கும். ஜூன் 15-ந்தேதி இந்திய வீரர்களை கொன்றதற்காக பல பத்து ஆண்டுகளுக்கு அது பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். சீனா தனது நற்பெயரை இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் இழந்துவிட்டது’ என்று கூறினார்.

லடாக் எல்லையில் நடத்திய கொடூர தாக்குதலால் சீனாவின் ராணுவம் வெறும் ஒரு அரசியல் படை என்பதும், அது ராணுவ தரத்தை உறுதி செய்யாது என்ற கருத்துகள் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதைப்போல மற்றொரு முன்னாள் துணைத்தளபதி சுப்ரதா சகா கூறும்போது, ‘ராணுவம் மற்றும தூதரக ரீதியான தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் சீனா தானாகவே தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அது தானாகவே ஒரு முனையில் ஒதுங்கி வருகிறது. சீனா செய்த தவறுக்காக ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதா விலையை அந்த நாடு கொடுக்கும்’ என்று தெரிவித்தார்.

சீனாவின் சர்வாதிகாரப்போக்கால் ஹாங்காங், தென் சீனக்கடல், கிழக்கு சீனக்கடல் போன்ற பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளால் சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ளதாக கூறிய அவர், அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தகப்போரும், ஆஸ்திரேலியாவுடனான அதன் கடும் வர்த்தக நெருக்கடி நிலையும் சர்வதேச அளவில் சீனாவுக்கு நெருக்கடியையே ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். 
Tags:    

Similar News