செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2020-06-24 21:08 GMT   |   Update On 2020-06-24 21:08 GMT
கொரோனா பரவலையும், பெட்ரோல் -டீசல் விலையையும் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறிவிட்டது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.,யுமான ராகுல் காந்தி, கொரோனா பரவல், ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு என பலவற்றை குறிப்பிட்டு மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில், பெட்ரோல் - டீசல் விலையும் கடந்த 7-ம் தேதி முதல் உயர்ந்து வருகிறது. 17 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10.49 பைசாவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலையும், பெட்ரோல் -டீசல் விலையையும் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறிவிட்டது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு கொரோனா வைரஸ் பரவலையும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வையும் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. ஊரடங்குக்கு பின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டும் நாள்தோறும் உயரவில்லை. பெட்ரோல் - டீசல் விலையும் உயர்ந்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.

மேலும், அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை மற்றும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை சுட்டிக்காட்டும் வரைபட நிரலையும் அந்த பதிவில் இணைத்துள்ளார்.
Tags:    

Similar News