செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் விரும்பியது: பட்னாவிஸ்

Published On 2020-06-24 03:31 GMT   |   Update On 2020-06-24 03:31 GMT
2 ஆண்டுகளுக்கு முன் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் விரும்பியது என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை :

மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் புதிதாக அரசியல் சமன்பாடு எதுவும் இல்லை. அரசாங்கத்தை மாற்றுவதோ அல்லது இந்த அரசை கவிழ்ப்பதோ எங்களது நிகழ்ச்சி நிரல் அல்ல. அரசாங்கம் எவ்வாறு இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை நான் வித்தியாசமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை.

2 ஆண்டுகளுக்கு முன் நான் முதல்-மந்திரியாக இருந்த போது, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் விரும்பியது.

இதுதொடர்பாக ஆலோசனைகள் நடந்தன. ஆனால் எங்களது தலைவர்கள் சிவசேனா உடனான உறவை துண்டிக்க மாட்டோம் என்று கூறினார்கள். அதன்பின்னர் கூட்டணி பேச்சு தடைபட்டு போனது.

தற்போது இந்த அரசாங்கத்தைப் பற்றி எந்த மதிப்பீடும் செய்ய வேண்டிய நேரம் இதுவல்ல. முதல்-மந்திரியை மாற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டிய நேரமும் இதுவல்ல. கேள்விகளை எழுப்ப வேண்டிய (கொரோனா தொடர்பாக) சரியான நேரம். இது அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய நேரம். பாரதீய ஜனதா பிரதான எதிர்க்கட்சியாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News