செய்திகள்
எல்லையில் முகாமிட்டுள்ள வீரர்கள் (கோப்பு படம்)

பேச்சுவார்த்தைக்கு பிறகு 10 இந்திய வீரர்களை விடுவித்தது சீனா

Published On 2020-06-19 07:03 GMT   |   Update On 2020-06-19 07:03 GMT
மூன்று நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்துள்ளது.
புதுடெல்லி:

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சீன ராணுவம் முதலில் அத்துமீறியதால் மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவம், இந்திய வீரர்கள் அத்துமீறியதாக சீன ராணுவமும் குற்றம்சாட்டுகின்றன.

இந்த மோதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

உயர்மட்ட அதிகாரிகள் அளவில் கடந்த 16ம்தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், சீனாவால் சிறைப்பிடிக்கப்பட்ட 2 உயர் அதிகாரிகள் உள்பட 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் சீனாவால் சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்கள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News