செய்திகள்
விஜய் மல்லையா

லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு

Published On 2020-06-04 08:39 GMT   |   Update On 2020-06-04 08:39 GMT
விஜய் மல்லையா நேற்று லண்டனில் இருந்து மும்பைக்கு நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
மும்பை:

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரத்து 961 கோடி கடன் வாங்கி இருந்தார்.

அந்த கடனை திருப்பி செலுத்தாமல் அவர் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். லண்டன் புறநகர் பகுதியில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் அவரை இந்தியா கொண்டு வர சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் விஜய் மல்லையாவை எந்த சிறையில் வைப்பார்கள் என்பதை தாக்கல் செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் விஜய் மல்லையா நேற்று இரவு லண்டனில் இருந்து மும்பைக்கு நாடு கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. மும்பை விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்து இறங்கிய அவரை மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியானது.

ஆனால் இன்று அதிகாலையில் தான் அந்த தகவல்கள் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. இது குறித்து மல்லையாவின் உதவியாளர் கூறுகையில், “இதுவரை மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவில்லை” என்றார்.

அதுபோல லண்டனில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்களும் மல்லையா நாடுகடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.

இன்னும் சில சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்த பிறகே அவர் நாடு கடத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News