செய்திகள்
கோப்புப்படம்

வீட்டில் 17 நாள் தனிமை போதும், மீண்டும் பரிசோதனை தேவையில்லை- மத்திய அரசு

Published On 2020-05-12 01:42 GMT   |   Update On 2020-05-12 01:42 GMT
லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள், வீட்டில் 17 நாள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. தனிமை காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு பரிசோதனை நடத்த தேவையில்லை என்று திருத்தப்பட்ட விதிமுறைகளில் மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:

லேசான கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில், சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது முக்கியம்.

அப்படி பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற பொதுமக்கள் உதவ வேண்டும். அவர்களை மறைத்து வைப்பது அவர்களுடைய குடும்பத்துக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் ஆபத்தாகும்.

லேசான கொரோனா அறிகுறிகள் மற்றும் தொடக்கநிலை அறிகுறி இருப்பவர்கள், அறிகுறி தென்பட்ட நாளில் இருந்து 17 நாட்களுக்குள், வீட்டில் தங்கள் தனிமைப்படுத்துதலை முடித்துக் கொள்ளலாம்.

அதுபோல், தொடர்ந்து 10 நாட்களாக காய்ச்சல் இல்லாதவர்களும் தங்கள் தனிமைப்படுத்துதலை முடித்துக் கொள்ளலாம். அத்தகையவர்களுக்கு தனிமை காலம் முடிந்த பிறகு கொரோனா பரிசோதனை நடத்த தேவையில்லை.

அவர்களை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். வீடுகளில் போதிய மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும்.

அதுபோல், ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, கொரோனா நோயாளிகள், லேசான, மிதமான, தீவிர என்று 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுவார்கள். லேசான அறிகுறி இருப்பவர்கள், அவர்களது மருத்துவ நிலவரத்தை பொறுத்து, பரிசோதனை நடத்தப்படாமலே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

இந்தியாவில், கொரோனாவுக்கு குணமடைபவர்கள் விகிதம் 31.15 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News