செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகம் வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்- எடியூரப்பா அறிவிப்பு

Published On 2020-05-11 06:47 GMT   |   Update On 2020-05-11 06:47 GMT
வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதாவது கடந்த 3 நாட்களில் மட்டும் 142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

வெளி மாநிலங்களில் இருந்து வருவோர்களால் கொரோனா அதிக அளவில் பரவுவதாக கர்நாடக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்திற்கு வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு விதித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வெளி மாநிலங்களில் சிக்கி உள்ள கன்னடர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும், சொந்த ஊர் திரும்ப விரும்புபவர்கள் ஆன்லைனில் தங்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஊரடங்கால் ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவிப்பவர்களை மட்டுமே கர்நாடகத்திற்குள் அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் அவர்கள் தகவல்களை பதிவு செய்யும் போது வருகை தரும் இடம் மற்றும் தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இங்கு இருக்கும் தனிமைப்படுத்தும் வசதிகளின் அடிப்படையில் அவர்கள் படிப்படியாக அனுமதிக்கப்படுவார்கள்.

கர்நாடகம் திரும்புபவர்கள் நேரடியாக அவர்களின் சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாது. அவர்கள் 14 நாட்கள் தனிமை முகாமில் கட்டாயம் இருக்க வேண்டும். தனிமை முகாமில் இருக்க தயாராக இருப்பவர்கள் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ரெயில்களில் கர்நாடகம் வருபவர்களின் பயண செலவை அரசு ஏற்கும். அவர்கள் இருக்கும் மாநிலங்களில் கொரோனா பரிசோதனை நடத்தி இருந்தாலும் கர்நாடகத்திற்குள் வரும் போது அத்தனை பேரும் மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள்.

ஒரு வேளை பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தால் அத்தகையவர்களின் உடலை கர்நாடகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்.

எங்கு இறக்கிறார்களோ அங்கேயே இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். அதேபோல் கர்நாடகத்திற்குள் இருக்கும் பிற மாநிலத்தினர் இங்கு இறந்தால் அவர்களின் உடலுக்கு இங்கேயே இறுதிச் சடங்கு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News