செய்திகள்
ஆன்லைன் விளையாட்டில் தன்னை வென்ற மனைவியை அடித்து உதைத்த கணவன்

தாயம் ஏற்படுத்திய காயம்: ஆன்லைன் விளையாட்டில் தன்னை வென்ற மனைவியை அடித்து உதைத்த கணவன்

Published On 2020-04-29 03:17 GMT   |   Update On 2020-04-29 03:17 GMT
ஆன்லைன் விளையாட்டில் மனைவி தன்னை தொடர்ந்து தோற்கடிக்க செய்ததால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த கணவன், மனைவியை எதிரியாக பாவித்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆமதாபாத் :

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகிவிட்டது. இந்த ஊரடங்கால் உறவுகள் பலப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பொழுதை கழிக்க நேரம் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்திருக்கிறது என பல்வேறு நன்மைகள் நடந்திருப்பதாக கூறப்பட்டாலும், இவைகளை முறியடிக்கும் அளவுக்கு குடும்ப சண்டைகளும் அதிகரித்து இருக்கத்தான் செய்கிறது. இதனால்தான் குடும்ப வன்முறை குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன என்று மகளிர் ஆணையமும் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒரு குடும்பத்தில் விளையாட்டு வினையான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அங்குள்ள ஆமதாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் ஊரடங்கை வீட்டில் சந்தோஷமாக கழிப்பதற்காக லுடோ (தாயம்) ஆன்லைன் விளையாட்டை செல்போனில் விளையாட தொடங்கி உள்ளார். பின்னர் தனது கணவரையும் அந்த விளையாட்டில் இணையச் செய்துள்ளார்.

இதையடுத்து இருவரும் தங்களது செல்போன்களில் அந்த விளையாட்டு மூலம் மோதிக் கொண்டனர். இதில் அந்த பெண் தொடர்ந்து வெற்றி வாகை சூடினார். கணவனால் இதனை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. எப்படியாவது மனைவியை தோற்கடிக்க வேண்டும் என்று முயன்ற அவருக்கு தொடர் தோல்வியே பரிசாக கிடைத்தது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த கணவன், மனைவியை எதிரியாக பாவித்து சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அந்த பெண், பின்னர் இது குறித்து மாநில ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கி உள்ளார்.

இதையடுத்து அந்த தம்பதிக்கு ஆலோசனை வழங்கிவிட்டு, ஏதேனும் பாதுகாப்பு தேவையா? என அந்த பெண்ணிடம் கேட்டதுக்கு அவர் தேவை இல்லை என மறுத்ததுடன், கணவர் மீது எந்த புகாரும் அளிக்காமல் தனது தாய் வீட்டில் சில நாட்கள் தஞ்சம் அடைய சென்றுவிட்டார்.
Tags:    

Similar News