செய்திகள்
மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன்

கொரோனா வைரஸ்: தீவிர மாவட்டங்கள், தீவிரமற்றவையாக மாறுகின்றன -மத்திய மந்திரி ஹர்சவர்தன்

Published On 2020-04-27 06:51 GMT   |   Update On 2020-04-27 06:51 GMT
கொரோனா வைரஸ் தொற்றால் தீவிர தாக்குதலுக்கு ஆளான மாவட்டங்கள், தீவிரமற்ற நிலைக்கு நகர்ந்து வருவதாக மத்திய மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறினார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக தீவிரமான தடுப்பு உத்திகளை வகுத்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது சற்றே குறைந்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தயார் நிலையை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் நேற்று சென்றார்.



அங்கு சிகிச்சை பெற்றுவரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுடன் அவர் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். அவர்களின் உடல்நிலை குறித்து கரிசனத்துடன் கேட்டறிந்தார். கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ‘ரோபோ’க்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் நோயாளிகளுக்கு, கிடைத்து வரும் வசதிகள் பற்றியும் அவர் விசாரித்து தெரிந்து கொண்டார். இது அவர்களுக்கு கூடுதலாக தேவைப்படுகிற வசதிகளை செய்து தருவதற்கு ஏதுவாக அமையும்.

கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளையும், அறிகுறிகளுடன் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களையும் 24 மணி நேரமும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிற எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் பாராட்டு தெரிவித்தார்.

ஊரடங்கை மக்கள் தீவிரமாக தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதின் தீவிரம் குறைந்து வருகிறது. இதன்காரணமாக கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாக பரவிய ‘ஹாட் ஸ்பாட்’ மாவட்டங்கள், இப்போது தீவிரமற்றவையாக நகர்ந்து வருகின்றன” என்றும் அவர் கூறினார்.

மேலும், “கொரோனா வைரஸ் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலங்கள், ஊரடங்கிலும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்; தனிமை வார்டுகள் அமைத்தல், தீவிர சிகிச்சை பிரிவில் தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், செயற்கை சுவாச கருவிகள் கிடைக்கச் செய்தல் போன்ற மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான ஊரடங்கு நிலவரம் பற்றி மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவ்பா காணொலி காட்சி வழியாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஆகியோருடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அப்போது மாநிலங்களின் நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை அமல்படுத்தும் விதம் குறித்து அவர் கேட்டறிந்தார். தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
Tags:    

Similar News