செய்திகள்
பாஜக எம்.பி. சித்தேஷ்வரின் மகள் அஷ்வினி.

கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி?- பா.ஜனதா எம்.பி.யின் மகள் வீடியோ மூலம் விளக்கம்

Published On 2020-04-10 06:22 GMT   |   Update On 2020-04-10 06:22 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி? என்று பா.ஜனதா எம்.பி.யின் மகள் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு:

தாவணகெரே பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் சித்தேஷ்வர். இவரது மகள் அஷ்வினி. இவர் தனது மகள் மற்றும் கணவருடன் கயானா நாட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம்(மார்ச்) இவர் கயானா நாட்டில் இருந்து தனது மகளுடன் இந்தியா திரும்பினார். அதையடுத்து அவருக்கும், அவருடைய மகளுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது அஷ்வினிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை டாக்டர்கள் தாவணகெரேவில் உள்ள எம்.எஸ். தனியார் மருத்துவமனையில் தனிமையில் வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து அஷ்வினி வீடு திரும்பினார். தற்போது அவர் தனிமை கால சவாலை எவ்வாறு எதிர்கொண்டார்?, கொரோனா வைரஸ் நோயில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி? என்பது குறித்து அவரே வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

மருத்துவமனையில் டாக்டர்கள் எனக்கு தரமான சிகிச்சை அளித்தனர். கொரோனாவில் இருந்து விடுபட முடியாது என்று பயப்பட வேண்டாம். மன உறுதியோடு போராடினால் கொரோனாவில் இருந்து குணமடைய முடியும்.

14 நாட்கள் என்னை டாக்டர்கள் தனிமையில் இருக்க சொன்னபோது எனக்கே வேடிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் அது சவாலான காலம். தனிமையில் இருந்ததால்தான் நான் பூரண குணமடைந்தேன். டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்றுக்கொண்டேன். நமது உடல்நலத்தை பாதுகாப்பது நம்முடைய முக்கிய கடமை.

நான் தனிமையில் இருந்தபோது என்னுடைய குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என பலரும் என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். எனக்கு ஆறுதல் கூறினர். என்னிடம் நகைச்சுவையாக பேசி என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டனர்.

நானும் தனிமை நேரத்தை வீணடிக்காமல் யோகா பயிற்சியில் ஈடுபட்டேன். நம்பிக்கையுடனும், வலிமையுடனும் இருந்தேன். தற்போது பூரண குணமடைந்து குடும்பத்தாருடன் பத்திரமாக இருக்கிறேன். அதனால் யாரும் எந்த சூழ்நிலையிலும் பயப்பட வேண்டாம்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தயவு செய்து தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News