செய்திகள்
கோப்புப்படம்

டெல்லி வன்முறை- கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு

Published On 2020-02-26 06:31 GMT   |   Update On 2020-02-26 06:31 GMT
வடகிழக்கு டெல்லி பகுதியில் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த் பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.

முஸ்லிம்களின் இந்த போராட்டத்துக்கு அந்த பகுதியில் உள்ள மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து எதிர் போராட்டத்தில் குதித்தனர். அது மோதலாக மாறியது.

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. வடகிழக்கு டெல்லி பகுதியில் தெருக்களில் நிறுத்தப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனால் டெல்லி வடகிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களை அடித்து உடைத்து தீ வைத்தனர். போலீசார் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்த இயலாமல்போய் விட்டது.

இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் மீதும் சரமாரியாக கல்வீசப்பட்டன. மறுநாள் திங்கட்கிழமையும் கலவரம் நீடித்தது. அன்று நடந்த தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் டெல்லி வடகிழக்கு பகுதியில் நேற்று 3-வது நாளாக கலவரம் நீடித்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களும், எதிர்ப்புவர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

என்றாலும் கலவரம் அடங்கவில்லை. இதனால் போலீசார் சில இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். கலவரம் நடந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


டெல்லி கலவரத்தில் நேற்று காலை வரை 5 பேர் பலியாகி இருந்தனர். பிறகு அது 8 ஆக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 13 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கலவரத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதன் காரணமாக டெல்லி வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 70 பேருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டு இருக்கிறது.

டெல்லி கலவரம் 3 நாட்களாக நீடித்ததை தொடர்ந்து நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். 3 முறை அவர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலவரம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் படைகளை குவிக்கவும், அமைதிக்குழுக்களை உருவாக்கி பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவுகள் உடனடியாக பிறப்பிக்கப்பட்டன.

அமித்ஷாவின் ஆலோசனையை தொடர்ந்து கூடுதலாக 35 கம்பெனி துணைநிலை ராணுவப்படை வடகிழக்கு டெல்லிக்கு விரைந்துள்ளது. அவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

என்றாலும் வடகிழக்கு டெல்லி பகுதியில் நேற்று இரவும் சில இடங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் நடந்தது. வீடுகளை தாக்கும் சம்பவம் அதிகரித்தது. இது பற்றி அறிந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் வடகிழக்கு டெல்லி பகுதிக்கு விரைந்தார்.

கலவரம் நடந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். அதன் பிறகு டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து வடகிழக்கு டெல்லி பகுதியில் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கலவரக்காரர்களில் ஒரு பிரிவினர் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தங்களது வீடுகளை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

அவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினார்கள். போராட்டம் நடத்தியவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே டெல்லி கலவரத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது. நேற்று இரவு 2 மணிக்கு நீதிபதி முரளிதர் வீட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது நீதிபதி கூறுகையில், “கலவரத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை போலீசார் செய்து கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டதாக போலீசார் 11 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். நேற்று கலவரம் தீவிரம் ஆனதால் டெல்லி மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இன்று காலை மெட்ரோ ரெயில் போக்குவரத்து சீரானது.

இன்று காலையிலும் சில இடங்களில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் வடகிழக்கு டெல்லி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லி வன்முறை சம்பவத்தை சில தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்புவதால் பதட்டம் தணியவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் வன்முறை காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீறி வன்முறை காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் கேபிள் டெலிவி‌ஷன் நெட்வொர்க் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கலவரத்தை முழுமையாக ஒடுக்குவதற்காக வடகிழக்கு டெல்லியில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் திரள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கியில் எச்சரித்து வருகிறார்கள்.

கல்வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக சுடுவதற்கு டெல்லி போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு டெல்லியில் இன்று காலை அமைதி நிலவியது.

கலவரத்தை ஒடுக்கி மக்களிடம் அமைதியை ஏற்படுத்துவற்காக டெல்லி போலீஸ் சிறப்பு கமி‌ஷனராக ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News