செய்திகள்
உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி

பரூக் அப்துல்லாவை தொடர்ந்து உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீதும் பாய்ந்தது பொதுப்பாதுகாப்பு சட்டம்

Published On 2020-02-06 17:31 GMT   |   Update On 2020-02-06 17:31 GMT
காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது இன்று பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும், அப்பகுதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

காஷ்மீரில் செயல்பட்டு வந்த பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர். 

யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு நேற்றுடன் 6 மாதங்கள் ஆன நிலையில் காஷ்மீரில் நிலைமை தற்போது சீரடைந்துள்ளது. பொது அமைதிக்கு எந்த இடையுறும் செய்யமாட்டோம் என்ற உத்திரவாதத்தின் அடைப்படையில் பல அரசியல் தலைவர்கள் தற்போது காஷ்மீரில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.  

 


இதற்கிடையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா ஏற்கனவே பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதவிர, முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட மேலும் சில அரசியல் தலைவர்கள்  170 என்ற சட்டப்பிரிவின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சட்டத்தின் படி ஒரு நபரை 6 மாதங்கள் மட்டுமே விசாரணையின்றி காவலில் வைக்கலாம். அதன் அடிப்படையில் அந்த காஷ்மீர் அரசியல் தலைவர்களின் வீட்டுக்காவல் நேற்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், வீட்டுக்காவலில் உள்ள காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி மீது இன்று பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்துள்ளது. 

இந்த இரண்டு தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய மாநாட்டுக்கட்சியின் பொதுச்செயளாலர் அலி முகமது சாஹர் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் சர்தாஷ் மத்னி மீதும் பொது பாதுகாப்புச்சட்டம் பாந்துள்ளது.

இந்த நடவடிக்கையால் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் மூன்று பேரும் பொது பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் எந்த வித விசாரணையும் இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News