செய்திகள்
உச்ச நீதிமன்றம்

ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?- 7 நாளில் பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2020-01-10 06:03 GMT   |   Update On 2020-01-10 09:25 GMT
ஜம்மு காஷ்மீரில் இணையசேவை முடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் பரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அங்கு இணைய சேவை முடக்கப்பட்டது. ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இணைய சேவை முடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 



இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

தனி நபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை காக்கவேண்டியது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமையாகும். ஜம்மு காஷ்மீரில் தனி நபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை சமமாக பார்க்கவேண்டியுள்ளது.

இணையதளத்தில் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். இன்டர்நெட்டில் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், அரசியல் சாசன சட்டப் பிரிவு 19ன் கீழ் வருகிறது. இணையதளம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கும்போது, அதனை மக்களுக்கு மத்திய அரசு முறையாக தெரிவிக்க வேண்டும். 

ஜம்மு காஷ்மீரில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது பற்றி ஒரு வாரத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News