செய்திகள்
மத்திய அரசு விருதை ஹலோ எப்.எம். இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தனிடம் ஆயு‌‌ஷ் துறை மந்திரி வழங்கினார்.

ஹலோ எப்.எம்.க்கு மத்திய அரசு விருது

Published On 2020-01-08 04:39 GMT   |   Update On 2020-01-08 04:39 GMT
யோகாவை மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்ததற்காக ஹலோ எப்.எம்.க்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் ஹலோ எப்.எம். இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தனிடம் விருதை மத்திய மந்திரி வழங்கினார்.
புதுடெல்லி:

சர்வதேச யோகா தின ஊடக விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான சி.கே.பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் அடங்கிய குழு இந்த விருதுக்கு உரிய ஊடக நிறுவனங்களை தேர்வு செய்து இருந்தது.

நாடு முழுவதும் உள்ள 11 வானொலி நிலையங்கள், 11 நாளிதழ்கள் மற்றும் 8 தொலைக்காட்சிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லி மீடியா சென்டரில் உள்ள அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகா‌‌ஷ் ஜவ்டேகர் தலைமை தாங்கினார்.

யோகாவை சிறப்பாக நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக ஹலோ எப்.எம்.க்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஹலோ எப்.எம். இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தனிடம் ஆயு‌‌ஷ் துறை மந்திரி ஸ்ரீபாத யஷோ நாயக் வழங்கினார். விருது சான்றிதழை ஹலோ எப்.எம்.க்கு மத்திய மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் வழங்கினார். அப்போது ஹலோ எப்.எம். தலைமை செயல்பாட்டு அதிகாரி ராஜீவ் நம்பியார் உடனிருந்தார்.

விழாவில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் ரவி மித்தல், தேர்வுக்குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News