search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹலோ எப்எம்"

    சேலம், ஈரோடு, வேலூரில் ‘ஹலோ எப்.எம்.’ ஒலிபரப்பை தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் இன்று தொடங்கி வைத்தார். #HelloFM

    சேலம்:

    தமிழ்நாட்டில் வானொலி பண்பலைகளில் ஹலோ எப்.எம். தனித்துவம் பெற்று முதன்மை இடத்தில் உள்ளது.

    தமிழக மக்களின் உள்ளத்தோடும், உணர்வோடும் உறவாடி வெற்றி பெற்ற ஹலோ எப்.எம். இன்று சேலம், ஈரோடு, வேலூரில் இருந்து தனது ஒலிபரப்பை தொடங்கி உள்ளது.

    பெண்கள், இளைஞர்கள், வியாபாரிகள், அலுவலகம் செல்பவர்கள், வாகன ஓட்டுனர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் மனதிலும் ஹலோ எப்.எம். நீங்கா இடம் பிடித்துள்ளது.

    புதிய பாடல்கள், பழைய பாடல்கள் மட்டுமின்றி வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் மிகக்குறுகிய காலத்தில் எப்.எம்.நேயர்களின் மத்தியில் ஹலோ எப்.எம். அமோக வரவேற்பை பெற்றது.

    சினிமா பாடல் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களின் சூடான பேட்டி, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் பேட்டி என நேயர்களின் ரசனைக்கேற்றவாறு பல்வேறு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது.

    சென்னையில் கடந்த 2006-ம் ஆண்டு ஹலோ எப்.எம். (106.4) ஒலிபரப்பு சேவையை தொடங்கியது.

    சென்னை ஹலோ எப்.எம்.மின் சரித்திர சாதனை வெற்றியை தொடர்ந்து 2007-08ம் ஆண்டுகளில் மதுரை, கோவை, திருச்சி, புதுச்சேரி, திருநெல்வேலி, தூத்துக்குடி நகரங்களிலும் ஹலோ எப்.எம். ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது.

    இதன்மூலம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஹலோ எப்.எம்.மின் நிகழ்ச்சிகளை 42 லட்சத்திற்கு மேற்பட்ட நேயர்கள் கேட்டு ரசித்து வருகிறார்கள். சென்னை உள்பட 7 நகரங்களை தொடர்ந்து இன்று முதல் சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய 3 நகரங்களில் ஹலோ எப்.எம். தடம் பதித்துள்ளது. சேலம் வேலூரில் 91.5 என்ற அலை வரிசையிலும், ஈரோட்டில் 92.7 என்ற அலை வரிசையிலும் தனது ஒலிபரப்பை ஹலோ எப்.எம். தொடங்கி உள்ளது.

    மாங்கனி மாநகரமான சேலத்தில் இன்று (1-ந் தேதி) ஹலோ எப்.எம். சேவை தொடக்க விழா நடந்தது. தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஹலோ எப்.எம். சேவையை தொடங்கி வைத்தார். இதே போல வேலூர், ஈரோட்டிலும் ஹலோ எப்.எம். சேவை இன்று தொடங்கியது.

    சேலம் ஹலோ எப்.எம். மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் ஹலோ எப்.எம். நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் இடைவிடாமல் கேட்டு மகிழலாம். சேலத்தில் முதன் முதலாக ஹலோ எப்.எம். தொடங்கப்பட்டுள்ளது சேலம் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலத்தில் இன்று நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் ஹலோ எப்.எம். தலைமை செயல் அதிகாரி ராஜூவ்நம்பியார், சி.ஓ.ஓ. விஜயன், மண்டல மேலாளர் கோப்ராஜ், நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் சேர்மன் ஆடிட்டர் நடராஜன், இயக்குனர் செந்தில், ஜே. எஸ்.பப்ளிசிட்டி சுரேஷ், சிவா ஆட்ஸ் சிவகுமார், சிவசக்தி ஆட்ஸ் சக்திவேல், ஆட்ஸ் குரூப் நடராஜன், அசோக்குமார் அட்வர்ட்டைசிங் அசோக்குமார், டெக்னோ மீடியா மேலாண்மை இயக்குனர் பி.எஸ். சுந்தரம், எக்சல் கல்லூரி சேர்மன் ஏ.கே.நடேசன், ஷார்ப்ட் ரானிக்ஸ் உரிமையாளர் மணீஷ், கொங்கு நாடு சான்றோர்குல நாடார் முன்னேற்ற சங்க மாநில தலைவர் உதயா ஜி.வெங்கடேஷ், செயலாளர் தேவராஜ், துணை கலெக்டர் (ஓய்வு)முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் மாரிமுத்து, கந்தசாமி, வசந்த், நரேந்திரன், குருசாமி, ராஜா, ராமசாமி, தமிழ்செல்வன், தரனிஷ், சின்னசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம், ஈரோடு, வேலூர் மூன்று ஊர்களிலும் ஹலோ எப்.எம். சார்பில் முதல் நாளிலேயே நேயர்களுக்கு தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடைகளை தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப்பிலோ அல்லது குறுந்தகவல் மூலமோ அனுப்பும் நேயர்களுக்கு தங்க காசுகள் பரிசு வழங்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் செல்லகுட்டி காடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் முதல் முதலாக இன்று தங்ககாசு பெற்றார். தொடர்ந்து நேயர்களுக்கு தங்க காசுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு 5 தங்ககாசுகள் வீதம் நாள் முழுவதும் 100 காசுகள் வழங்கப்படுகிறது. இதனால் சேலம் நேயர்கள் இன்னிசை மழையுடன் தங்க காசுகளையும் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.

    மேலும் சேலம் ஹலோ எப்.எம்.அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும், பாடல்களை கேட்கவும் 0427-6606666 என்ற தொலை பேசியை தொடர்பு கொள்ளலாம் என்று ஹலோ எப். எம். நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #HelloFM

    ×