செய்திகள்
ராகுல் காந்தி

பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் - ராகுல் கண்டனம்

Published On 2020-01-04 10:46 GMT   |   Update On 2020-01-04 10:46 GMT
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரசின் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் நேற்று அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சீக்கிய மதத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நாங்கள் வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த விஷயத்தில் தலையிட்டு சீக்கிய யாத்ரீகர்களை தாக்குதல் நடத்தும் கும்பலிடம் இருந்து உடனடியாக மீட்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நன்கானா சாகிப் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News