செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமருக்கு எதிராக அசாமில் போராட்டம்- மாணவர் சங்கம் அறிவிப்பு

Published On 2019-12-30 07:58 GMT   |   Update On 2019-12-30 07:58 GMT
விளையாட்டு போட்டி தொடக்க விழாவிற்கு வருகை தர உள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அசாமில் போராட்டம் நடத்த மாணவர் சங்கம் முடிவு எடுத்துள்ளது.

கவுகாத்தி:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அசாமில் போராட்டம் மிகவும் தீவிரமாக இருக்கிறது.

‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஜனவரி 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியை தொடங்கி வைக்க வரும் பிரதமருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அசாம் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து அசாம் மாணவர் சங்க (ஏ.ஏ.எஸ்.யூ) தலைவர் தீபங்கா குமார்நாத் கூறியதாவது:-

அசாமில் 2 முக்கிய விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அசாம் வர வாய்ப்பு இருக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அவர் முதல்முறையாக இங்கு வருகிறார். மாநிலத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதை காட்டுவதற்காக மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறோம்.

மோடி அசாம் வந்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் சங்க தலைமை ஆலோசகர் சமுஜியால் குமார் பட்டாச்சாரியா கூறியதாவது:-

பா.ஜனதா அரசு அசாமின் அடையாளத்தை அழிக்க நினைக்கிறது. 1971 மார்ச் 21-ந்தேதிக்கு பிறகு சட்ட விரோதமாக அசாமுக்குள் வந்த யாருக்கும் குடியுரிமை அளிக்கப்படக் கூடாது என்பது எங்களின் நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் வந்தால் அவருக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News