செய்திகள்
மீன்பிடி துறைமுகம்

3 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க தமிழகத்துக்கு ரூ.453 கோடி கடன் - டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து

Published On 2019-12-23 23:36 GMT   |   Update On 2019-12-23 23:36 GMT
3 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க தமிழகத்துக்கு ரூ.453 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.
புதுடெல்லி:

மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள மீன்வளம் மற்றும் மீன் உற்பத்தி மேம்பாட்டு நிதி நிறுவனம் (எப்.ஐ.டி.எப்.) நபார்டு வங்கி மூலம் மாநில அரசுகளுக்கு மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் அமைத்தல், மீன் பண்ணைகளை நவீனமயமாக்குதல், மீன் சந்தைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கான நோய் ஆராய்ச்சி மையங்கள் போன்றவை அமைப்பதற்கு கடன் வழங்குகிறது.

எப்.ஐ.டி.எப். இந்த துறையில் உள்ள தனியாருக்கும் வர்த்தக வங்கிகள் மூலம் கடன் வழங்குகிறது. ஆனால் இதுவரை தனியாரிடம் இருந்து மத்திய அரசுக்கு எந்த பரிந்துரைகளும் வரவில்லை.

தமிழக அரசு எப்.ஐ.டி.எப். நிறுவனத்திடம் ரூ.836.80 கோடி கடன் கேட்டு பரிந்துரையை சமர்ப்பித்தது. இதில் தமிழ்நாட்டில் 3 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.453 கோடி கடன் வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று மத்திய மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ்சிங் முன்னிலையில் மத்திய மீன்வளத் துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு, நபார்டு வங்கி ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.

இந்த கடனுக்கான வட்டியில் 3 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. எனவே குறைந்த வட்டியான 5 சதவீதத்தில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 12 ஆண்டுகளில் இந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

ஒப்பந்தம் கையெழுத்தானதும் மத்திய மந்திரி கிரிராஜ்சிங் கூறும்போது, “தமிழ்நாடு அரசு முதலாவதாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மிசோரம், அசாம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களும் மொத்தம் ரூ.2,751 கோடிக்கு பரிந்துரைகள் அனுப்பியுள்ளன” என்றார்.
Tags:    

Similar News