செய்திகள்
உண்ணாவிரதம் இருந்துவரும் சுவாதி மாலிவால்

திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் - மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்

Published On 2019-12-15 02:39 GMT   |   Update On 2019-12-15 02:39 GMT
ஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

ஆந்திர பிரதேசம் மாநில சட்டசபையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றிய முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.

இதற்கிடையே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கடந்த 3-ம் தேதி முதல் டெல்லி ராஜ்கட் அருகே காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் சுவாதி மாலிவாலை, டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயாரும் தந்தையும் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.

இந்நிலையில், ஆந்திராவில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News