செய்திகள்
கைது

தங்க நகை தருவதாக கூறி கோவை டாக்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி- வேன் டிரைவர் கைது

Published On 2019-11-23 06:21 GMT   |   Update On 2019-11-23 06:21 GMT
தங்க நகை தருவதாக கூறி கோவை டாக்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு அருகே சுள்ளியார்மடத்தை சேர்ந்தவர் அக்பர்(வயது 27). வேன் டிரைவர்.

இவர் கடந்த 19-ந் தேதி கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு யுனானி மருத்துவம் பார்த்து வரும் டாக்டர் நடராஜன் என்பவரை சந்தித்தார். அப்போது எங்கள் ஊரான கோவிந்தாபுரத்திற்கு நீங்கள் வாருங்கள்.

அங்கு நான் உங்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை ரூ.15 லட்சத்திற்கு தருவதாக கூறினார். இதை உண்மை என நம்பி நடராஜனும் கடந்த சில நாட்களுக்கு முன் சென்று ரூ.5 லட்சம் கொடுத்தார். அதற்கு அக்பர் தன்னிடம் இருந்த சில தங்க நாணயங்களை கொடுத்தார். அவை உண்மையான தங்கம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று நடராஜன் கோவிந்தாபுரத்திற்கு சென்று அக்பரிடம் ரூ.10 லட்சம் கொடுத்து தங்க நகைகள் தருமாறு கூறினார். அக்பர் பணத்தை வாங்கி கொண்டு நகை வைத்திருந்த பையை காரில் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நடராஜன் பையை எடுத்து நகையை பார்த்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடராஜன் சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்னி வழக்குப்பதிவு செய்து டாக்டரிடம் போலி நகை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சுள்ளியார்மடத்தை சேர்ந்த அக்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News