செய்திகள்
சரத்பவாருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (கோப்பு படம்)

முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிரா அரசியல் முட்டுக்கட்டை- காங்கிரஸ், தேசியவாத காங். இன்று கூட்டு கூட்டம்

Published On 2019-11-21 03:57 GMT   |   Update On 2019-11-21 03:57 GMT
மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வந்து கூட்டணி ஆட்சியை உறுதி செய்வதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
  • மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் புதிய அரசு அமைவதில் தாமதம். 
  • சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்பதில் சிவசேனா உறுதியாக இருந்ததால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை. 
  • மும்பையில் நாளை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை.

புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவு தனிப்பெரும்பான்மை இல்லாததால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்பதில் சிவசேனா உறுதியாக இருந்ததால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை. பின்னர் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா,  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரிதிவிராஜ் சவான் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே நீண்ட நேரம் நேர்மறையான விவாதங்கள் நடைபெற்றதாகவும், மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை விரைவில் தங்களால் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.



‘காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் கூட்டுக் கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை (இன்று) பிற்பகல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். அதன்பின்னர் மாலையில் மும்பைக்கு செல்ல உள்ளோம். வெள்ளிக்கிழமை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆலோசனை நடத்தி, அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றும் சவான் கூறினார்.

எனவே மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைப்பதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதாக தெரிகிறது. நாளை மும்பையில் மூன்று கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து பேசியபின்னர், ஆட்சியமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News