செய்திகள்
கோப்புப்படம்

தீபாவளியை சீர்குலைக்க 5 பயங்கரவாதிகள் சதி- தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

Published On 2019-10-18 09:33 GMT   |   Update On 2019-10-18 09:33 GMT
இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்கள் முன்பு 5 பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மும்பையில் தாக்குதல் நடத்தியது போல இந்தியாவில் மீண்டும் ஒரு பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீருக்குள் அவர்களது அட்டூழியங்களை தாக்க பதிலடி கொடுத்து ஒடுக்கி வரும் ராணுவம் சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் பலாகோட் முகாமை குண்டுகள் வீசி அழித்தது. அதில் 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்து வரும் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் எல்லையில் நூற்றுக்கணக்கில் பதுங்கியுள்ளனர். ஆனால் காஷ்மீர் எல்லையில் தீவிர கண்காணிப்பு இருப்பதால் அவர்களால் முன்பு போல ஊடுருவ இயலவில்லை.

இதனால் வேறு வழிகளில் இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். தென் இந்திய கடல் வழியாக ஊடுருவ அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது இந்த முயற்சியை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டு பிடித்துள்ளது.

இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள கோரக்பூரில் 5 பயங்கரவாதிகள் நடமாடியதை கண்டு பிடித்துள்ளனர். அவர்களது செல்போன் உரையாடல்களை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இடைமறித்து கேட்டனர். அப்போது அவர்கள் இந்தியாவில் 2 முக்கிய நகரங்களுக்குள் ஊடுருவ இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிந்தது.



நாடு முழுவதும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு ஓரிரு நாட்கள் முன்பு 5 பயங்கரவாதிகளும் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் வழியாக ஊடுருவ முயற்சிகளில் ஈடுபட்டுள்ள 5 பயங்கரவாதிகளும் இரு குழுக்களாக பிரிய உள்ளனர். ஒரு குழு டெல்லிக்கும் மற்றொரு குழு இன்னொரு நகரிலும் குண்டு வெடிப்புகளை நடத்த சதி செய்துள்ளனர். இந்த சதி திட்டத்துக்கு உதவி செய்ய காஷ்மீரில் உள்ள சில சிலிப்பர் செல் உறுப்பினர்களையும் அவர்கள் 5 பேரும் நாடி உள்ளனர்.

இதையடுத்து காஷ்மீரில் உள்ள சிலர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் நேபாளத்தில் இருந்து நாட்டின் பகுதிகளை இணைக்கும் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகள் கைவரிசை காட்டும் முன்பு அவர்களை வேட்டையாட பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News