செய்திகள்
கோப்பு படம்

தனியார் ரெயிலில் விதியை மீறி கட்டண உயர்வு - ஆன்லைன் முன்பதிவுக்கு எதிர்ப்பு

Published On 2019-10-14 09:34 GMT   |   Update On 2019-10-14 09:34 GMT
டெல்லி - லக்னோ இடையே விடப்பட்ட முதல் தனியார் ரெயிலில் விதியை மீறி கட்டண உயர்வுக்கு ரெயில்வே அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

ரெயில் போக்குவரத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தனியார் மயம் ஆக உள்ளது.

தனியார் மயத்தின் தொடக்கமாக டெல்லி- லக்னோ இடையே ஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த மாத தொடக்கத்தில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து அந்த தனியார் ரெயில் சேவை நடந்து வருகிறது.

அடுத்து மும்பைக்கும் குஜராத் தலைநகர் ஆமதாபாத்துக்கும் இடையே ஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த வழித்தடத்தில் தனியார் ரெயில் ஓட உள்ளது.

டெல்லி - லக்னோ இடையே இயக்கப்படும் தனியார் ரெயிலில் பல்வேறு புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க குளிர் சாதன வசதி கொண்ட அந்த ரெயிலில் விமான பணிப்பெண்கள் போல பயணிகள் சேவைக்காக சீருடை அணிந்த இளம் பெண்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

டெல்லி-லக்னோ ரெயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும், அதன் பயண நேரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் ரெயில்வே சட்டம்-1989 விதிகளை மீறி தனியார் ரெயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “பயணிகள் ரெயில் கட்டணத்தை மத்திய அரசுக்குதான் நிர்ணயித்து முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி.க்கு கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லை” என்கிறார்கள்.

டெல்லி-லக்னோ தனியார் எக்ஸ்பிரஸ் ரெயில் 511 கி.மீ. தூரத்தை 6 மணி நேரம் 30 நிமிடங்களில் சென்றடைகிறது. வழியில் காசியாத், கான்பூர் சென்ட்ரல் ஆகிய இரு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இந்த ரெயிலில் முதல் வகுப்பு கட்டணமாக ரூ.2,450 வசூலிக்கப்படுகிறது.

ஏ.சி. சேர் காரில் அமர்ந்து பயணம் செய்ய ரூ.1565 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மிக, மிக அதிகமாக உள்ளதாக பயணிகள் மத்தியிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விமான டிக்கெட் கட்டணம் அளவுக்கு தனியார் ரெயிலில் கட்டணம் இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டெல்லி - லக்னோ இடையே ஓடும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தனியார் ரெயில் ஓடும் அதே 6 மணி 30 நிமிடத்தில் சென்று சேர்ந்து விடுகிறது. ஆனால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிகளில் ஏ.சி. முதல் வகுப்புக்கு ரூ.1855 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. சேர் காருக்கு ரூ.1165 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மற்ற சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்ய ரூ.645 மட்டுமே கட்டணமாக உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் தனியார் ரெயில்களில் 4 மடங்கு அதிக கட்டணம் வசூ லிக்கப்படுவதாக புகார்கள் கூறப்படுகிறது.

மேலும் தனியார் ரெயில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கும் ரெயில்வே அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரெயில்வே சட்டத்தின்படி பயணிகள் ரெயில் டிக்கெட்டை 100 சதவீதம் ஆன்லைனில் விற்க கூடாது. கவுண்டர்களில்தான் விற்க வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியையும் தனியார் மீறி விட்டதாக ரெயில்வே மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முதல் தனியார் ரெயிலிலேயே கட்டணம் தொடர்பாக குளறுபடி ஏற்பட்டு இருப்பதால் அதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி ரெயில் பயணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags:    

Similar News