செய்திகள்
ஐநா மனித உரிமை கமி‌ஷன்

காஷ்மீரில் அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைப்பதா? - ஐ.நா. மனித உரிமை கமி‌ஷன் கண்டனம்

Published On 2019-09-10 07:40 GMT   |   Update On 2019-09-10 08:20 GMT
காஷ்மீரில் அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை கமி‌ஷன் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-வை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து கடந்த மாதம் 5-ந் தேதி உத்தரவிட்டது. அதோடு மாநில அங்கீகாரத்தை நீக்கும் வகையில் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

இதனால் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்-மந்திரிகளை கைது செய்து வீட்டு காவலில் வைத்தது. மேலும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் இருந்தது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. மக்கள் கூடுவதை தடை செய்யும் வகையில் 144 உத்தரவு போடப்பட்டு இருந்தது. சில நேரங்களில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு பின்னர் கடுமைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் மிச்சேல் பேச்லெட் கூறியதாவது:-

 


காஷ்மீரில் இந்திய அரசு சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த கவலை அளிக்கிறது. அங்கு நடந்த மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட வி‌ஷயம் அதிர்ச்சி அளிக்கிறது. இணைய தள சேவை, உள்ளிட்ட தகவல் தொடர்புகள் முடக்கம், உள்ளூர் அரசியல்வாதிகள் கைது ஆகிய நடவடிக்கைகள் சரியானது கிடையாது.

காஷ்மீரில் தற்போது ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டும். அங்குள்ள கட்டுப்பாடுகளுக்கு இந்திய அரசு முடிவு கட்ட வேண்டும்.

அங்குள்ள மக்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும். காஷ்மீர் மக்களிடம் ஆலோசித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட வேண்டும்.

அசாம் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கப்பட்டது கவலை அளிக்கிறது. பதிவேட்டில் இல்லாத மக்களுக்கும் சட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் மனுக்களை முறையாக விசாரிக்க வேண்டும். தேசமற்றவர்களாக மக்கள் ஆக்கப்படுவது கூடாது.

இவ்வாறு மிச்சேல் பேச்லெட் கூறியுள்ளார்.

Tags:    

Similar News