செய்திகள்
செல்போன் மூலம் டிக்கெட் முன்பதிவு (மாதிரி படம்)

ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை வரி - நாளை முதல் அமல்

Published On 2019-08-31 10:42 GMT   |   Update On 2019-08-31 10:42 GMT
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.15 முதல் ரூ.30 வரை சேவை கட்டணம் வசூலிக்க ரெயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
புதுடெல்லி:

ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன், அந்த இணையதளம் வாயிலாக, ரெயிலில் தூங்கும் வசதி டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.20–ம், ஏ.சி. வசதி ரெயில் டிக்கெட்டுக்கு ரூ.40–ம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டது.

பின்னர் 'டிஜிட்டல்' முறையிலான பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவை கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது. இதனால், ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திற்கு இணையதள டிக்கெட் முன்பதிவு வாயிலாக கிடைத்த வருவாய் 26 சதவீதம் குறைந்தது. 

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின், தற்போது இணையதள டிக்கெட் முன்பதிவிற்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளில், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.15 மற்றும் முதல் வகுப்பு உட்பட ஏசி வகுப்புகளுக்கு ரூ.30 வசூலிக்கப்பட உள்ளது. இந்த சேவைக் கட்டணம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
Tags:    

Similar News