செய்திகள்
மாயாவதி

மோடியின் வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே உள்ளன- மாயாவதி குற்றச்சாட்டு

Published On 2019-08-16 20:39 GMT   |   Update On 2019-08-16 20:39 GMT
மத்திய பா.ஜனதா அரசின் பெரும்பாலான வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே உள்ளன என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

லக்னோ:

பிரதமர் மோடியின் சுதந்திரதின உரை குறித்து மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

பிரதமர் மோடி அவரது சுதந்திரதின உரையில் வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், கல்வி கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவது ஆகியவற்றுக்கான வலுவான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவற்றை அறிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

விளிம்பு நிலையில் இருக்கும் சமூகத்தை சேர்ந்த மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். அச்சம் இல்லாத சூழ்நிலை உருவாக்கப்படும் என்று உறுதி அளிக்கவில்லை.

முக்கிய பிரச்சினைகள் குறித்து மோடி எதுவும் பேச வில்லை. அவரது சுதந்திர தின பேச்சின் மூலம் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்ற முழு நம்பிக்கை ஏற்படவில்லை. சிறிதளவே நம்பிக்கை அளிக்கிறது.

மத்திய பா.ஜனதா அரசின் பெரும்பாலான வாக்குறுதிகளும், அறிவிப்புகளும் ஏட்டளவிலேயே உள்ளன. அவற்றை செயல்படுத்த வலுவான திட்டங்கள் எதையும் நடை முறைப்படுத்தவில்லை. அது பற்றி பிரதமர் குறிப்பிடவும் இல்லை.


ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் நலனுக்காக அரசு பாடுபடுவது என்ற உணர்வு அந்த மாநில மக்களிடையே ஏற்பட வேண்டும். இந்த நேரத்தில் காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது தேவையற்றது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஏழைகள், தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்படவில்லை என்றால் அங்கு நிலமை மேலும் மோசமாகும். வெறும் பேச்சு பயன்தராது.

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. பிரதமர் உரையிலும் இது தெரிகிறது. முடிவில் நம்பத்தகுந்த திட்டங்களுடன் மத்திய அரசு மக்களை அணுக வேண்டும். நாட்டுக்கு தேவையான வி‌ஷயங்கள் பற்றி பிரதமர் அக்கறை செலுத்த வேண்டும்.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

Tags:    

Similar News