செய்திகள்
மெகபூபா முப்தி

பதவியை ராஜினாமா செய்யுங்கள்- காஷ்மீர் மேல்சபை எம்.பி.க்களுக்கு மெகபூபா உத்தரவு

Published On 2019-08-08 08:01 GMT   |   Update On 2019-08-08 08:01 GMT
மேல்சபையில் தங்கள் கட்சியின் 2 எம்.பி.க்களையும் ராஜினாமா செய்யுமாறு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், பி.டி.பி. கட்சி தலைவருமான மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.

மாநில அங்கீகாரத்தை ரத்து செய்து இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்-மந்திரிகள் உமர்அப்துல்லா, மெகபூபா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அவர்கள் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மேல்சபையில் கொண்டு வந்த போது மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) எம்.பி.க்கள் பயாஸ் அகமது, நசிர் அகமது ஆகிய 2 பேரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் இந்திய அரசியல் சட்ட பிரதிகளை கிழித்து எறிந்தனர்.

இந்த நிலையில் மேல்சபையில் தங்கள் கட்சியின் 2 எம்.பி.க்களையும் ராஜினாமா செய்யுமாறு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், பி.டி.பி. கட்சி தலைவருமான மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது விருந்தினர் மாளிகையில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர் இந்த தகவலை இரண்டு எம்.பி.க் களுக்கும் அனுப்பி உள்ளார். ராஜினாமா செய்யாவிட்டால் நீக்கப்படுவீர்கள் என்றும் அவர் எச்சரித்து உள்ளார். இதை மெகபூபாவின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பயாஸ் அகமது எம்.பி. கூறும் போது நாங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய விருப்பத்துடன் இருக்கிறோம். ஆனால் கட்சி தலைமையில் இருந்து யாரும் பேசவில்லை. எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆனாலும் நாங்கள் இது தொடர்பாக விவாதித்து வருகிறோம் என்றார்.
Tags:    

Similar News