செய்திகள்
மேகதாது அணை

மேகதாது அணை - கர்நாடகாவுக்கு அனுமதி மறுப்பு

Published On 2019-08-07 05:56 GMT   |   Update On 2019-08-07 05:56 GMT
காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

புதுடெல்லி:

காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பல அணைகளை கர்நாடகா அரசு கட்டி உள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா பாசனம் ஆண்டு தோறும் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. கர்நாடக அரசு குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீரை திறந்து விடாததால் தமிழக விவசாயிகள் மிக பெரிய இழப்புகளை சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லைக்கு மிக அருகில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றை கட்ட கர்நாடக அரசு திட்ட மிட்டுள்ளது. மிக பிரமாண்டமாக இரு மலைகளுக்கு இடையே கட்ட திட்டமிட்டுள்ள இந்த அணையால் தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருவது முழுமையாக நின்று விடும் அபாயம் உள்ளது.

எனவே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி காவிரி நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு இந்த பிரச்சினையை எழுப்பி உள்ளது.


என்றாலும் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதல் கட்ட பணிகளை கர்நாடகா தொடங்கியது. அதன்படி மேகதாது பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழக அரசு இதை சுட்டிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்ததும் ஆய்வு பணிகள் கைவிடப்பட்டன. ஆனால் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கர்நாடகா மனு செய்தது. இந்த ஆய்வை மேற்கொள்ள முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமி வலியுறுத்தி வந்தார்.

அவர் பதவி பறிபோன நிலையில் புதிய முதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பா நேற்று டெல்லி சென்று இது தொடர்பாக மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அவர் மோடியிடம் கடிதம் ஒன்றையும் அளித்தார்.

அந்த கடிதத்தில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை என்று எந்த சட்டமும் இல்லை. மேலும் அணை கட்டப்படும் இடம் கர்நாடக எல்லைப்பகுதிக்குள் உள்ளது. இதற்கு சுப்ரீம்கோர்ட்டும் தடை விதிக்கவில்லை” என்று கூறிஇருந்தார்.

இதையடுத்து கர்நாடகாவுக்கு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை மேற் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று கர்நாடக மாநில அரசியல் தலைவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மத்திய அரசு அதிரடியாக கர்நாடகாவுக்கு அனுமதி மறுத்துள்ளது.

தமிழக அரசின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி கர்நாடகாவின் ஆய்வு கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறி இருப்பதாவது:-

தமிழகம்-கர்நாடகா இரு மாநிலங்களுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்பட்டால்தான் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்படும். மேகதாது தவிர மாற்று இடம் ஒன்றை குறிப்பிடும்படி சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறி இருந்தது.

ஆனால் அணைக்கான மாற்று இடத்தை இதுவரை கர்நாடகா அரசு தெரிவிக்க வில்லை. எனவே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழு ஆய்வு நடத்த தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்டிவிட வேண்டும் என்பதில் கர்நாடகா மாநிலம் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. இந்த அணைக்காக கர்நாடக மாநில அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பிரச்சினையில் தொடக்கம் முதலே மத்திய அரசிடம் தமிழகத்தின் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். அதுமட்டுமின்றி சுப்ரீம்கோர்ட்டிலும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர வைத்தார்.

அந்த வழக்கு இன்னமும் முடிவுக்கு வராமல் நிலுவையில் உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய தொடர் சட்ட நடவடிக்கையால் தமிழக அரசின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

Tags:    

Similar News