செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

உன்னாவ் விவகாரம் - பாதிக்கப்பட்ட பெண் டெல்லி எய்ம்சுக்கு மாற்றப்பட்டார்

Published On 2019-08-06 02:16 GMT   |   Update On 2019-08-06 02:16 GMT
உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் கார் விபத்து ஒன்றில் படுகாயத்துடன் உயிர் தப்பினர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இருவரும் சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில், பணி தொடர்பாக விசாரிக்க குல்தீப்பின் உதவி தேடி அவரது வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார். அங்கு குல்தீப் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சமீபத்தில் அந்த பெண் தனது தாய், வழக்கறிஞர் மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் வந்த கார் மீது லாரி மோதியது. அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து குல்தீப் சிங் செங்கார் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்டார். 

இதையடுத்து, உன்னாவ் பெண் பாலியல் புகார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் மாற்றியது. கார் விபத்தில் சிக்கிய பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரும் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இருவருக்கும் சிகிச்சை அளித்த மருத்துவர்களின் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அப்பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் விமானம் மூலம்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகிய இருவரும் தொடர் சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
Tags:    

Similar News