செய்திகள்
உமர் அப்துல்லா

காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகளை வெளியேற்றம் செய்யும் அளவுக்கு என்ன தேவை.. -உமர் அப்துல்லா

Published On 2019-08-03 09:54 GMT   |   Update On 2019-08-03 09:54 GMT
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா காஷ்மீரின் நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அமர்நாத் யாத்திரையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.

சட்டப்பிரிவு ரத்து, மாநிலம் பிரிக்கப்பட இருக்கிறது என பல்வேறு யூகங்கள் கொடி கட்டி பறக்கிறது. ஆனால்,  ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இதனை மறுத்து வருகிறார்.

இந்த சூழலில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உமர் அப்துல்லா கூறியதாவது:



ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கப்போகிறது என்பதை யாரும் சொல்ல மறுக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மக்களின் பதற்றத்தை போக்கும் வகையில் மத்திய அரசு  அறிவிப்பை வெளியிட வேண்டும்.  காஷ்மீரில் ஏதோ நடப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், என்ன நடக்கிறது என்பது அதிகாரிகளுக்கும் தெரியவில்லை.

35 ஏ, 370 சட்டம் ரத்து செய்யப்பட இருப்பதாகவும், மாநிலம் மூன்றாக பிரிக்கப்பட இருப்பதாகவும் வதந்திகள் பரவுகின்றன என நாங்கள் ஆளுநரிடம் தெரிவித்தோம். எந்த ஒரு அறிவிப்புக்கும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று ஆளுநர் எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.  

திங்கள் கிழமை பாராளுமன்றம் கூடும் போது, அமர்நாத் யாத்திரை ரத்து மற்றும் சுற்றுலாப்பயணிகளை வெளியேற்றம் செய்யும் அளவுக்கு என்ன தேவை எழுந்தது என்பது பற்றி மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும். மக்கள் அச்சப்பட தேவையில்லை என பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News