செய்திகள்
எடியூரப்பா

எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறாதது ஏன்?

Published On 2019-08-02 03:30 GMT   |   Update On 2019-08-02 03:30 GMT
முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறாதது ஏன்? என்றும், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினருக்கு மந்திரி பதவி வழங்கப்படுகிறதா? என்றும் கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகள் இடையே கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முதல்-மந்திரியாக கடந்த 26-ந் தேதி பதவி ஏற்றார். பொதுவாக நாட்டில் எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும், புதிய முதல்-மந்திரிக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து கூறுவது வழக்கம்.

ஆனால் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஒரு வாரமாகியும், மோடி இன்னும் அவருக்கு வாழ்த்து கூறவில்லை. இந்த விஷயத்தில் அவர் மவுனம் காத்து வருகிறார். எடியூரப்பா முதல்-மந்திரி ஆனதை அவர் விரும்பவில்லையா? என்று பேச்சு எழுந்துள்ளது. எடியூரப்பாவுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மட்டும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு ஆட்சி அமைக்க பா.ஜனதா தலைவர் அமித்ஷா சில நாட்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இது அரசியல் அரங்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.



இந்த நிலையில் ஆட்சி அமைந்து ஒரு வாரமாகியும் புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்படவில்லை. அமித்ஷாவின் அழைப்புக்காக எடியூரப்பா காத்திருக்கிறார். ஆனால் இதுவரை டெல்லியில் இருந்து அவருக்கு அழைப்பு வரவில்லை. அதனால் புதிய மந்திரிகள் நியமன பணிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமாகும் என்று கூறப்படுகிறது.

ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும், ஒருவேளை சட்ட சிக்கல் இருந்தால் தமது குடும்பத்தினருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் புதிய மந்திரிகளை நியமனம் செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மந்திரி பதவிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

கட்சியில் அனைவரும் மந்திரி பதவி கேட்டால் ராஜினாமா செய்தவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டாமா? என்று எடியூரப்பா கோபத்துடன் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. மந்திரிகள் நியமனத்திற்கு பிறகு பா.ஜனதாவில் அதிருப்தி எழும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு அதிருப்தி எழுந்தால், கர்நாடகத்தில் இருந்து வரும் நிலையற்ற அரசியல், தொடர்ந்து நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Tags:    

Similar News