செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள படையினர் தயார் - ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்

Published On 2019-06-23 01:10 GMT   |   Update On 2019-06-23 01:10 GMT
எல்லையில் எழும் அனைத்து பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் படையினர் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு:

ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட அக்னூர் எல்லையோர பகுதிகளை ஆய்வு செய்தார். அங்கு பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள், பயங்கரவாதிகளின் ஊடுருவல் போன்ற பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு படையினரின் தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அப்போது அவர் ஆய்வு செய்தார்.

இந்த பயணத்தின்போது அவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒயிட் நைட் படைப்பிரிவினருடன் கலந்துரையாடினார். அப்போது அங்கு படையினர் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருக்கும் வீரர்கள் அனைவரையும் பிபின் ராவத் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

பின்னர் அவர் பேசுகையில் எல்லையில் எழும் அனைத்து பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் படையினர் தயார் நிலையில் இருப்பதாக திருப்தி வெளியிட்டார். ராணுவ தளபதியின் இந்த ஆய்வின் போது வடக்கு பிராந்திய தளபதி ரன்பிர் சிங் உடன் இருந்தார். 
Tags:    

Similar News