search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bipin Rawat"

    நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளதாகவும், இதில் அச்சமடைவதற்கு எந்த தேவையும் இல்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். #BipinRawat
    புதுடெல்லி:

    ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லை நெடுகிலும் நாங்கள் அமைதியை பராமரித்து வருகிறோம். நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன. இதில் அச்சமடைவதற்கு எந்த தேவையும் இல்லை.

    ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவு குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கிறது. ஆனால் ராணுவத்தை பொறுத்தவரை இது ஏற்கத்தக்கது அல்ல.

    ராணுவம், சட்டத்தை விட மேலானது அல்ல என்றாலும், ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம். ராணுவம் பழமைவாதமானது, ஒரு குடும்பம் போன்றது. எனவே இதில் மேற்படி செயல்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.
    காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறு விதமான பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் கடும் எச்சரிக்கை விடுத்தார். #ArmyChief #BipinRawat
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் தினமும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சில் 22 வயது ராஜேந்திர சிங் என்னும் படை வீரர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதையடுத்து ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படி கல்வீசி தாக்குதல் நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இதுபோல் தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வீச்சில் ஈடுபடுவோர் மீது ராணுவம் வழக்கும் பதிவு செய்யும்.

    அதேபோல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) நிறுத்திக்கொள்ளவேண்டும். 1971-ம் ஆண்டு நம்மிடம் போரில் தோற்றதன் காரணமாக நமது அண்டை நாடு தொடர்ந்து பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது.


    சட்ட ரீதியாக காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அதை யாரும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. அதை நாமும் முறியடிக்கிறோம். அதேநேரம் பாகிஸ்தான் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தால் வேறு விதமான பதிலடி தரவேண்டியது வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் அது எந்த மாதிரியான நடவடிக்கையாக அமையும் என்பது பற்றி ராணுவ தளபதி நேரடியாக குறிப்பிடவில்லை.

    எனினும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து நடத்திய துல்லிய தாக்குதல் நடத்தியது போன்ற நடவடிக்கையாக அது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. #ArmyChief #BipinRawat

    ரஷியாவிடம் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக, அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும், இந்தியா சுயேச்சையான கொள்கையை பின்பற்றி வருவதாக ராணுவ தளபதி கூறினார். #BipinRawat #IndianArmyChief
    புதுடெல்லி:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தார். அப்போது, ரஷியாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

    ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளது. அதையும் மீறி, இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது.

    இந்நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத், தனது 6 நாட்கள் ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இந்தியா திரும்பினார். நேற்று டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ரஷிய பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.



    ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியதாவது:-

    இந்திய ராணுவத்துடன் நல்லுறவு வைத்துக்கொள்ள ரஷியா விரும்புகிறது. ஏனென்றால், நமது ராணுவம் வலிமையானது, நமக்கு எது சரியானது என்பதை அறிந்து, அதற்காக உறுதியாக நிற்போம் என்பதை ரஷியா உணர்ந்துள்ளது.

    இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவது பற்றி ரஷிய கடற்படை அதிகாரி ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், “எங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படக்கூடும் என்பதை அறிவோம். இருப்பினும், நாங்கள் சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறோம்” என்று கூறினேன்.

    அமெரிக்காவிடம் இருந்து சில தொழில்நுட்பங்களை பெறுவதற்காக அந்நாட்டுடன் நாங்கள் தொடர்பு வைத்திருந்தாலும், அதுகுறித்து ரஷியா கவலைப்பட வேண்டாம், நாங்கள் சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறோம் என்றும் அவர்களிடம் கூறினேன். எங்கள் நாட்டுக்கு எது நல்லதோ, அதை செய்வோம் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

    ரஷியாவிடம் இருந்து காமோவ் ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் இதர ஆயுத தளவாடங்களை வாங்குவதில் இந்தியா ஆர்வமாக இருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பங்களையும் பெற விரும்புகிறோம்.

    இவ்வாறு ராணுவ தளபதி பேசினார்.

    இதற்கிடையே, இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தளபதி நம்பியார், மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமானம் மிகவும் திறன் வாய்ந்தது. நான் 2 வாரங்களுக்கு முன்பு, பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது, அதில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த விமானம், விமானப்படைக்கு திருப்புமுனையாக அமையும். இந்த பகுதிக்கு ரபேல் விமானம் வந்தால், அது நல்ல பாதுகாப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறிய நிலையில் போருக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் எதிர்வினையாற்றியுள்ளது. #BipinRawat #PakistanArmy
    இஸ்லாமாபாத் :

    இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.

    இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டிய இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது.

    இதற்கிடையே, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்திய வீரர்கள் மீதான பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பதிலடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். மேலும், நமது ராணுவ வீரர்கள் உணர்ந்த அதே வேதனையை அவர்களும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.



    இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் ராணுவம் போருக்கு தயாராக உள்ளது என அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், உயிரிழந்த வீரரின் உடலை சிதைத்த இந்திய ராணுவம் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது. அவர்கள், கடந்த காலங்களில் இதை போன்று பலமுறை செய்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் கட்டுக்கோப்பானது, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் எவ்விதத்திலும் எங்கள் ராணுவம் ஈடுபடாது.

    போருக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். எனினும், பாகிஸ்தான் மக்களின் நலன், அண்டை நாடுகள் மற்றும் பிராந்திய நலன் கருதி அமைதி வழியில் செல்லவே விரும்புகிறோம்.

    எல்லையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று கடந்த மே மாதம் இந்திய ராணுவம் கோரிக்கை வைத்தது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால், இவ்வாறான செயல்களில் இந்திய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டால் நாங்கள் வேறு விதமான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் வரும் என ஆசிப் கபூர் தெரிவித்தார். #BipinRawat #PakistanArmy
    அமர்நாத் யாத்திரை இம்மாத இறுதியில் தொடங்குவதால் அசம்பாவிதங்களை தவிற்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். #AmarnathYatra
    ஸ்ரீநகர் :

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.

    கடந்த வருடம் ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  7 பேர் பலியாகினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த, தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே வரும் 28-ம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்  கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



    மேலும், பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் நோக்கத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும், காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகள் மிகுந்த எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று காஷ்மீர் சென்றுள்ள மத்திய பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமன், மாநிலத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அம்மாநில கவர்னர் என்.என்.வோஹ்ராவுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அதைத்தொடர்ந்து, இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமர்நாத் யாத்திரைக்காக, பல்தால் ராணுவ தளத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டனர். #AmarnathYatra 
    ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ள கவர்னர் ஆட்சியால் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதிப்பு ஏற்படாது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
    ஜம்மு:

    இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்திச் சென்று கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசிப் குடும்பத்தாரை சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    ரம்ஜான் நோன்பு காலத்தை கருத்தில் கொண்டு காஷ்மீரில் ராணுவத்தின் சார்பில் அமல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் ரம்ஜான் பண்டிகைக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக அறிவித்தார்.

    இதை தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் வழக்கம்போல் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. நேற்று விலக்கி கொண்டதை தொடர்ந்து அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கவர்னர் ஆட்சியால் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதிப்பு ஏற்படாது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, டெல்லியில் இன்று பேட்டியளித்த பிபின் ராவத், ‘காஷ்மீரில் ரம்ஜானுக்காக நாங்கள் போர் நிறுத்தம் அறிவித்தோம். அதனால் என்ன ஆனது? என்பதை நாம் பார்த்தோம்.

    அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் எங்கள் நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கம்போல் பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களது பணிகள் தொடரும். எவ்வித அரசியல் தலையீடும் எங்களுக்கு இருக்காது’ என குறிப்பிட்டார். #JKGovernorRule #BipinRawat 
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு பின் சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்துக்கு ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #Bipin Rawat #JammuandKashmir #Aurangzeb
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவரை என்கவுண்டரில் வீழ்த்திய ராணுவ குழுவில் அவுரங்கசீப்பும் ஒருவர்.

    இந்நிலையில், அவுரங்கசீப் ரம்ஜான் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து, அவுரங்கசீப்பை கடத்தியது ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், புல்வாமாவுக்கு இன்று சென்ற ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பயங்கரவாதிகளால் கடத்தி சுட்டுக்கொல்லப்பட்ட அவுரங்கசீப்பின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.. #Bipin Rawat #JammuandKashmir #Aurangzeb
    இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். #BipinRawat #RanilWickremesinghe

    கொழும்பு: 

    இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நான்கு நாள் பயணமாக இன்று இலங்கை சென்றார்.  இந்திய ராணுவ தளபதியாக அவர் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும். 

    இலங்கை சென்ர அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதல் நாளான இன்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு பாதுகாப்பு குறித்து இருவரும் விவாதித்தனர். 

    அதன்பின் இலங்கை ராணுவ தளபதி மகேஷ் செனநாயகே, கடற்படை தளபதி எஸ்.எஸ்.ரணசிங்கே மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபிலா வைத்யரத்னே ஆகியோரையும் பிபின் ராவத் சந்தித்து பேசினார்.



    இதைத்தொடர்ந்து நாளை கண்டி பகுதியில் இந்திய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு ஆய்வுகூடத்தை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, தியட்டலாவா பகுதியில் அமைந்துள்ள இலங்கை ராணுவ பயிற்சி மையத்தை பார்வையிடுகிறார். கண்டி மற்றும் திரிகோணமலை பகுதியில் இலங்கையின் பிராந்திய ராணுவ தளபதிகளை அவர் சந்திக்கிறார். #BipinRawat #RanilWickremesinghe
    இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நாளை இலங்கைக்கு முதல் முறையாக பயணம் செய்ய உள்ளார். #BipinRawat
    புதுடெல்லி:

    இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நாளை இலங்கை செல்கிறார்.  இந்திய ராணுவ தளபதியாக அவர் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.

    கண்டி பகுதியில் இந்திய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு ஆய்வுகூடத்தை தொடங்கி வைக்கிறார்.அதைத்தொடர்ந்து, தியட்டலாவா பகுதியில் அமைந்துள்ள இலங்கை ராணுவ பயிற்சி மையத்தை பார்வையிடுகிறார்.

    மேலும், இந்த பயணத்தின் போது இலங்கையின் மூத்த  அரசியல்தலைவர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை அவர் சந்தித்து பேச உள்ளார் என இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கண்டி மற்றும் திரிகோணமலை பகுதியில் இலங்கையின் பிராந்திய ராணுவ தளபதிகளை அவர் சந்திக்கிறார். #BipinRawat   
    ×