செய்திகள்

கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்

Published On 2019-06-14 02:11 GMT   |   Update On 2019-06-14 02:11 GMT
ஆட்சியை தக்க வைக்கும் நடவடிக்கையாக கர்நாடக மந்திரிசபை இன்று (வெள்ளிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலம் இழுத்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சிப்பதாக கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் படுதோல்வி அடைந்ததால் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் முயற்சிப்பார்கள் என்ற தகவல் வெளியானது.

இதையடுத்து, கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமட்டள்ளி, பி.சி.பட்டீல் உள்ளிட்டோரை சமாதானப் படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால் மூத்த தலைவரான ராமலிங்க ரெட்டிக்கு மந்திரி பதவி வழங்காததால், அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து, மந்திரி சபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மந்திரிசபையை மாற்றி அமைப்பதா? என்ற குழப்பம் உண்டானது.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்க, முதற்கட்டமாக அவர்கள் 2 பேருக்கும் மந்திரி பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், கடந்த 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடிகர் மற்றும் எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டதால், கடந்த 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை.

மாறாக வருகிற 14-ந் தேதி (அதாவது இன்று) மந்திரிசபை விரிவாக்கம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீண்ட இழுபறிக்கு பின்பு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று(வெள்ளிக்கிழமை) ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகையில் மதியம் 1 மணியளவில் நடைபெற உள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஸ், ஆர்.சங்கர் ஆகியோர் மந்திரி களாக பதவி ஏற்க உள்ளனர். அவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

தற்போது கூட்டணி ஆட்சியில் மந்திரிசபையில் காங்கிரசுக்கு ஒரு இடமும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 2 இடங்களும் காலியாக உள்ளன. காங்கிரஸ் வசம் உள்ள ஒரு இடம் சுயேச்சை எம்.எல்.ஏ. வுக்கு வழங்கப்பட இருக்கிறது. அதுபோல, கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொள்ள ஒரு இடத்தை மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ.வுக்கு வழங்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்தார். அதன்படி, இன்று 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர். ஆனால் ஜனதா தளம்(எஸ்) கட்சி வசம் மீதமுள்ள ஒரு இடத்தை கைப்பற்ற, அக்கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக எம்.எல்.சி.யான பி.எம்.பாரூக், ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள எச்.விஸ்வநாத் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் பி.எம்.பாரூக்கிற்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அது குறித்து தேவேகவுடாவுடன் ஆலோசித்து குமாரசாமி இன்று இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தவிர 3-வதாக மந்திரி பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில், கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொள்ள சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் மந்திரி பதவி வழங்குவதற்கு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் சபாநாயகரான கோலிவாட், சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஆர்.சங்கருக்கு மந்திரி பதவி வழங்க கூடாது என்று நேற்று பகிரங்கமாக கருத்து தெரிவித்தார்.

இதனால் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பின்பு கூட்டணி அரசில் மீண்டும் விரிசல் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமட்டள்ளி, பி.சி.பட்டீல் உள்ளிட்டோர் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பா.ஜனதா தலைவர்களும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News