செய்திகள்

8 வழிச்சாலை திட்டத்திற்கு விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published On 2019-06-03 09:37 GMT   |   Update On 2019-06-03 09:37 GMT
8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுடெல்லி:

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான கோடைகால அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், இந்த சாலைத் திட்டம் தொடர்பான வழக்கை விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது என்றும் கூறினர்.


“சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் அதிக தவறுகள் இருப்பதை பார்க்க முடிகிறது. திட்ட அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நிறைய பேரிடம் நிலங்கள் வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளன. திட்டத்திற்கான அனுமதி கிடைப்பதற்கு முன்பே நிலத்தை எடுத்து தரவுகளை எப்படி சேர்த்தீர்கள்? இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயமாக நாங்கள் கருதவில்லை.

எனவே, இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News